skip to Main Content

A letter to Jayalalithaa – முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்

Please note: I am not the author of this article, nor these my political views. What is written is the view of the author only. Please ignore if you feel it is offensive. Thank you.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு…

தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும் ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது,
நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை….மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணி பலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலய தவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல….

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இல்லாமல் கெடும்.

என்பது  வள்ளுவரின் குறள்.

இடித்து சொல்லவும், எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள் கூட்டணி கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது.
(தொடர்ந்து விஜயகாந்த் உங்கள கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமே…கூட்டணியிலிருந்து உங்களால் விரட்டப்படலாம், அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால் அதுவரை….உங்கள் தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?)

பரவாயில்லை, இதுதான் மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால், தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல் வாக்குப்பதிவு மிசினையும், தேர்தல் ஆணையத்தையும்  குறைசொல்லும் உங்கள் தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகணும். நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே….அந்த அளவுக்காவது சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியதுதான்).

பிடிக்காத அரசு  ஊழியர்களை, காவல்துறையினர்களை பழி வாங்குவது, பந்தாடுவது, பிடிக்காதவர்களை அடித்து உதைப்பது, கஞ்சா கேஸ் போடுவது, எஸ்மா, டெஸ்மா, போடா சட்டங்கள் மூலம் சிறைக்கு அனுப்புவது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது, கோவில்களில் ஆடு, மாடு, கோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின் குரல்வளையை நெறிப்பது போன்ற  கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒரு நல்லாட்சியை தாருங்கள். குறிப்பாக சசிகலா  வகையறாக்களை கட்சியிலும், ஆட்சியிலும் தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள். உங்களின் கடந்த கால ஆட்சியில் அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர். கலைஞருக்கு அவரின் குடும்பம் என்றால் உங்களுக்கு சசியின் குடும்பம்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து எழ வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின் தீவிரத்தை காட்டி, சட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள். இப்போதும் அப்படி செய்து விடாதீர்கள். சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும் அமர வையுங்கள்.

கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின்  தொப்பி போல இருக்கிறது என்று கிண்டல் செய்து, இந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்க மாட்டேன் என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயே நுழைகிறீர்கள். அதற்கான மராமத்து  பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில் 50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.

இப்படி செய்யும் நீங்கள்தான் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதி போதவில்லை என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர். இப்போது இதை விட வசதியாக இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே திரும்பியிருக்கிறீர்கள். நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம் என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்?
யார் வெட்டிய கிணறாக இருந்தால் என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே?…

இதை மறுக்கும் நீங்கள்…..இன்று சென்னையில் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க காரணமாக விளங்கும் மேம்பாலங்களில் அதிக மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதுதான்….அப்படி கலைஞரால்  கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியில் நான் பயணிக்க மாட்டேன் என்று அவற்றையெல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டுகிறேன் என்று மக்கள் வரிப்பணத்தை வீணடித்து விடாதீர்கள்.

அடுத்து, மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும்…தமிழ்நாட்டில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ், வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை நீக்கி விடாதீர்கள். இன்று பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க 108 ஆம்புலன்ஸ் பெரிதும் காரணியாக விளங்குகிறது. குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ வசதி இந்த திட்டத்தால் தான் கிடைத்திருக்கிறது. வேண்டுமானால் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். காப்பீடு திட்டம் என்றோ, ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்றோ…இல்லாவிட்டால் உங்கள் தாயார் பேரில் சந்தியா காப்பீடு திட்டம் என்றோ பெயரை மாற்றி கொள்ளுங்கள். ஆனால் இந்த திட்டத்தை மட்டும் தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.

அடுத்து, இலவசங்கள்….
மக்கள் விரும்புவது இலவசங்களை அல்ல….அப்படி இலவசம் தான் முக்கியமென்றால் அதையெல்லாம் கொடுத்த கலைஞரையே மீண்டும் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுப்பேன் என்று சொன்ன இலவசங்களால் அல்ல….தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்களை விட கலைஞரே நம்பகத்தன்மை உள்ளவர் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு ஒன்றைத்தான்…அதாவது மக்கள் விரும்புவது நல்ல வாழ்க்கை தரத்தைதான். மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டால் அவர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்வார்கள். பின்னர் யாரிடமும் எதற்காகவும் இலவசங்களுக்காக கையேந்த மாட்டார்கள். அதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டுங்கள்.

அடுத்து மின்சாரம்,
இன்று மின்தடையால் ஜெனரேட்டர், இன்வர்டர், UPS விற்பவர்களை தவிர மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுதொழில், பெருந்தொழில் என்று பாரபட்சமில்லாமல் நீக்கமற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறையே நலிந்து நசிந்து போய் விட்டது. மின்சாரம் தடையின்றி  கிடைக்க திட்டமிடுங்கள். இன்று இலவச மின்சாரங்கள் மூலம் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இன்று இலவச மின்சார பயனாளிகளில் பலர் ஏக்கர் கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள்தான். ஏழைகளுக்கு இலவச மின்சாரம் என்ற நோக்கமே அடிபட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல்  சொத்து வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று அறிவித்து முறைபடுத்துங்கள். அதுபோல…ஆங்காங்கே கொக்கிகள் போட்டு மின்சாரம் திருடுபவர்களை பிடித்து கடுமையான தண்டனை தாருங்கள்.

அடுத்து….
மந்திரிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்…அது உங்கள் உரிமை என்றாலும் கூட அப்படி செய்வது  நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும். ஒருவரை  ஒரு குறிப்பிட்ட துறைக்கு மந்திரியாக நியமிக்கிறீர்கள் என்றால்..அவர் அந்த துறையை பற்றி தெரிந்து(புரிந்து) கொள்ளவே சிலகாலம் எடுக்கும். அப்படி அவர் அந்த துறையை பற்றி தெரிந்து கொண்டிருக்கும்போதே அவரை மாற்றிவிட்டு இன்னொருவரை, பின்னர் அவரை மாற்றிவிட்டு வேறொருவரை நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு பயனுமில்லை. இதனால் உங்கள் கட்சி MLA-க்கள் அனைவரும் சுழற்சி முறையில் மந்திரியாகிவிடுவார்கள் என்பதை தவிர…..

இன்னும் நிறைய இருக்கிறது எழுத…ஆனால் வெளியில் ஆட்டோ வரும் சப்தம் கேட்பதால்  இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இறுதியாக ஒன்று,
இந்த முறையாவது நீங்கள் நல்லாட்சி கொடுங்கள்….இல்லாவிட்டால் கலைஞரின் தவறுகள் மூலம் நோகாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததுபோல…அடுத்தமுறை தி.மு.க. வருவதற்கு உங்கள் தவறே காரணமாகிவிடும் என்று கூறி விடை பெறுகிறேன்.
இப்படிக்கு
எதிர்பார்ப்புடன்…
வாக்காளன்

This Post Has 5 Comments

  1. This is what every voter’s expectation! To ‘B’ or ‘no2B’ is up to JJ. To my knowledge, I Know JJ is a very sensible leader and will not put down Tamils under her feet & crush!

  2. Maybe it will maybe not Fowji. Just because she wont read it, doesnt mean we should not write to her. Most politicians dont take public comments seriously, but it is our right to give. But if she reads this letter through my blog!!! then definetely it makes a huuuuuuuge difference to me! 😛

    Malick machan, I also think she is a sensible leader or has to be from now. She has to put her past into cold storage and concentrate on developing Tamil Nadu and it’s people. Let’s hope and pray for the best.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top